உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் அரசு மருத்துவமனையில் துவக்கம்

 காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகள் அரசு மருத்துவமனையில் துவக்கம்

சென்னை: பருவ மழைக் காலத்தில் பரவும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிறப்பு வார்டு துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு வாரமாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 1,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், காய்ச்சல் மற்றும் பருவ மழைக்கால நோய்களுக்கான சிறப்பு வார்டு துவக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மருத்துவமனையின் முதல்வர் கவிதா கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பருவ மழைக் காலத்தையொட்டி, சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கான 10 படுக்கைகளும், பெண்களுக்கான, 10 படுக்கைகளும் கொசு வலைகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளது. இதைத் தவிர வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இன்ப்ளூயன்ஸா, நுரையீரல் பாதிப்புகள், சுவாச பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக பல்நோக்கு மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அந்த வார்டில், 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' சாதனம் நிறுவப்பட்டு, அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மாத்திரைகள், திரவ மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் என, அனைத்துமே போதிய அளவு இருப்பில் உள்ளன. எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதற்கான நிலவேம்புக் குடிநீரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், உப்பு -சர்க்கரை கரைசலும் வழங்கப்படும். நோயாளிகளின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவ சாதனங்களும், பரிசோதனை உபகரணங்களும் சிறப்பு வார்டில் உள்ளன. உயர் சிகிச்சைகள் தேவைப்பட்டால், அதற்கான சிறப்பு பிரிவுகளுக்கு நோயாளிகளை மாற்றி சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை