பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, ஐந்து மாதங்களில் சேதமானதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டு, பொன்னியம்மன் நகர், நான்காவது தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு, அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளித்தது.இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபரில், பூந்தமல்லி நகராட்சி சார்பில், பொன்னியம்மன் நகர் நான்காவது தெரு, கே.எஸ்.நகர் மற்றும் கலைமகள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த தார்ச்சாலை, கடுமையாக சேதமடைந்து காட்சியளிக்கிறது.குறிப்பாக, பொன்னியம்மன் நகர் நான்காவது தெருவில், பல இடங்களில் ஜல்லி பெயர்ந்து, படுமோசமாக மாறியுள்ளது.இதனால், இவ்வழியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தினமும் இடறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.பூந்தமல்லி, குமணன்சாவடி, அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலை, ஐந்து மாதங்களில் கடுமையாக சேதமானதால், நகராட்சி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள், தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, ஜல்லி பெயர்ந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.