| ADDED : ஜன 20, 2024 01:10 AM
சென்னை, சென்னை, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள, 3.5 கி.மீ., துாரத்தை கடக்க, 25 முதல் 30 நிமிடம் ஆகிறது.இந்த நெரிசலுக்கு தீர்வு காண, தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.2 கி.மீ., நீளத்திற்கு, 14 மீட்டர் அகலம் கொண்ட, நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான கட்டுமானப் பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இப்பணிகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளன. இது, மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதியில் கட்டப்படும், முதல் உயர்மட்ட சாலை. இப்பாலப் பணி முடிந்தால், தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை 3.5 கி.மீ., துாரத்தை, மூன்று முதல் ஐந்து நிமிடங்களில் கடந்து செல்லலாம். மேலும் இப்பாலம், சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலு, சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.