மண்டை ஓடு வைத்த சம்பவம் வடபழனி போதை ஆசாமி கைது
வடபழனி, வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு, எலும்புகள் வைத்த சம்பவத்தில், வடபழனி போலீசார், ஒருவரை கைது செய்தனர். வடபழனி, சோமசுந்தரபாரதி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன், 51. கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, இவரது வீட்டு வாசலில் மாந்திரீகம் செய்யப்பட்ட மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விசாரித்த வடபழனி போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த அப்சர் அலி, 24, என்பவர், அருகில் உள்ள சுடுகாட்டில் இருந்து மண்டை ஓடு மற்றும் எலும்புகளை எடுத்து வந்து, கருணாகரன் வீட்டு வாசலில் வைத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கருணாக ரன், அவரது வீட்டிற்கு சென்று கேட்ட போது அப்சர் அலி கத்தியை காட்டி மிரட்டி அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து வடபழனி போலீசார், அப்சர் அலியை கைது செய்தனர். கருணாகரன் மீது இருந்த முன்விரோதம் காரணமாக, மது போதையில் அப்சர் அலி இவ்வாறு செய்தது தெரியவந்தது.