திருத்தணி:திருத்தணி நகரத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இதுதவிர திருத்தணி முருகன் கோவிலில், தேவஸ்தானம் சார்பில் வள்ளி மண்டபம், மயில் மண்டபம், காவடி மண்டபம், விநாயகர் மண்டபம் மற்றும் ஆர்.சி.மண்டபம் ஆகிய இடங்களில் திருமணங்கள் நடத்தி வைக்கப் படுகின்றன.இந்நிலையில் நேற்று சுபமுகூர்த்தம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் மட்டும், 45 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதே போல் திருத்தணி நகரத்தில் தனியார் மண்டபங்களில், 75 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. மேற்கண்ட திருமண நிகழ்ச்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் என, ஆயிரக்கணக்கானோர் இரு சக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகளில் திருத்தணி நகரத்திற்கு வந்ததால், திருத்தணியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
கந்தசுவாமி கோவிலில் நெரிசல்
சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால், கோவிலில் திருமணம் செய்ய 32 பேர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், வேண்டுதலின் காரணமாக முன்பதிவு செய்யாமல் பலரும் திருமணம் செய்ய வந்திருந்தனர். அந்தவகையில் 54 திருமணங்கள் நடந்தன.இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று, ஒரே நாளில் மட்டும் 10,000க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.