| ADDED : பிப் 02, 2024 07:34 AM
வடபழநி,: ரயில்வே இணையதளத்தில் முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்த பணம் குறித்து, அந்த தளத்தில் உள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்த பயனாளியின் கிரேடிட் கார்டு கணக்கில் இருந்து பணம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வடபழநி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 51. இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருகிறார். இவர், சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல ரயில்வே இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தார்.வேலை பளு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாததால், முன் பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தார். அவ்வொறு ரத்து செய்த டிக்கெட்டிற்கான பணம் வராததால், ஐ.ஆர்.டி.சி., இணைய தளத்தில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.மறு முனையில் பேசிய நபர், ஸ்ரீதரனின் கிரேடிட் கார் விபரங்கள் மற்றும் ரகசிய எண் உள்ளிட்ட தகவல்களை பெற்றுள்ளார். சிறுது நேரத்தில் அவரது கிரேடிட் கார் கணக்கில் இருந்து, 1.08 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீதரன், வடபழநி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் ஐ.ஆர்.டி.சி., இணையதளத்தில் இருந்த மொபைல் எண், ஐ.ஆர்.டி.சி., யால் பதிவிடப்படவில்லை என, தெரியவந்தது. எனவே, இந்த இணையதளத்தில் ஊடுருவல் ஏற்பட்டுள்ளதா என விசாரிக்கின்றனர்.