| ADDED : ஜூலை 14, 2011 09:11 PM
கோவை : 'தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அத்துமீறி கூடுதல் கல்விக்கட்டணம்
வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும்' என, பா.ஜ.,
வலியுறுத்தியுள்ளது. பா.ஜ., மாவட்ட தலைவர் நந்தகுமார் கலெக்டரிடம் அளித்த
மனு: கோவையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில், கல்விக்கட்டணம் எனும்
பெயரில் அத்துமீறல் நடக்கிறது. இது தொடர்பான புகார்களை கல்வித்துறை
அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பெற் றோர் அவதிப்படுகின்றனர். எனவே, இதற்கு
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பிலான கமிட்டி நிர்ணயித்த கட்டண
விபரங்களை பெற்றோர் அறியுமாறு பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
கமிட்டி பரிந்துரைத்த கல்விக் கட்டணத்தை மட்டுமே பெற்று, கூடுதலாக வசூலித்த
தொகையை திருப்பித் தர வேண்டும். அரசு அனுமதியின்றி யோகா, கராத்தே, இந்தி
மற்றும் ஆங்கில சிறப்பு வகுப்புகளுக்கு தனி கட்டணம் வசூலிக்கக்கூடாது.
பெற்றோர் விருப்பப்பட்டால் அதற்கு முறையான ரசீது வழங்க வேண்டும். கட்டணத்தை
செலுத்தமாறு வலியுறுத்தி குழந்தைகளை வெளியில் நிற்க வைப்பது, அடிப்பது,
புத்தகங்களை வழங்காமல் இருப்பது போன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை
தடுக்க வேண்டும். பெற்றோர் கூட்டமைப்பு மற்றும் பள்ளி நிர்வாகிகள்,
வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்க
வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நியாயம் கேட்பவர்கள் மீது,
அத்துமீறி பொய்வழக்கு போடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.