உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குற்றம் செய்த சிறுவர்களை நல்வழிப்படுத்த இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் 15 நாட்கள் பணி

குற்றம் செய்த சிறுவர்களை நல்வழிப்படுத்த இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் 15 நாட்கள் பணி

கோவை;குற்றம் செய்த சிறுவர்களை நல்வழிப்படுத்த இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 15 நாட்கள் பணி வழங்கப்பட்டுள்ளது.குற்றச்சம்பவங்களில் ஈடுபடும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து வருகின்றனர். அங்கு அவர்களை நல்வழிப்படுத்த சீர்திருத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களின் மனநிலையை மாற்ற, அவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்யும் மனபான்மையை கொண்டு வந்து நல்வழிபடுத்த சிறுவர் நீதிவாரியம் முடிவு செய்தது.இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கு, 15 நாட்கள் மக்கள் சேவை செய்யும் பணி வழங்கப்பட்டது. அதேபோல, கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ள சிறுவர்கள், 4 பேர் கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு செய்தால் மட்டுமே ஜாமீன் வழங்கப்படும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் மணிவண்ணன் மேற்பார்வையில் அந்த, 4 சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை பிரிவு, சமையல் கூடம் ஆகிய இடங்களில் பணி வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் உதவியாளராக பணியாற்றினர்.இதுகுறித்து டாக்டர் மணிவண்ணன் கூறியதாவது:குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவர்களை நல்வழிப்படுத்த இதுபோன்ற பணி வழங்கலாம் என்று சிறுவர் நீதிவாரிய நீதிபதி எனக்கு நேரடியாக அறிவுறுத்தி கடிதம் அனுப்பினார். அதன்படி, 4 சிறுவர்களுக்கும் பணிகள் வழங்கப்பட்டது.சமையல் கூடத்தில் காய்கறி நறுக்குதல், பாத்திரம் கழுவுதல் போன்ற எளிமையான பணிகள் வழங்கப்படும். அப்போது அவர்களது அருகில் யாராது ஒருவர் இருப்பார்கள். அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் போது, மருத்துவ ஊழியர்களுக்கு உதவி செய்யும் பணி வழங்கப்படுகிறது. காலையில் இருந்து மதியம் வரை மட்டுமே பணி வழங்கப்படும்.பணி இடைவெளியில் அவர்களிடம் ஒரு டாக்டராக இல்லாமல் தந்தையாக பேசுவேன். நேர்மையான வழியில் எல்லாம் கிடைக்கும், எந்த சூழலிலும் தவறு செய்ய கூடாது என அறிவுரைகளை வழங்குவேன். சிறுவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளது. தற்போது போக்சோ வழக்கில் கைதான ஒரு சிறுவனும், திருட்டு போன்ற சிறிய தவறுகளை செய்த, 3 சிறுவர்களுக்கும் பணி வழங்கப்பட்டு உள்ளது.அதில், 17 வயதில் கைது செய்யப்பட்ட, 20 வயது வாலிபர் ஒருவர் உள்ளார். இவர்களின் நடத்தை குறித்து புகைப்படத்துடன் கூடிய ஆதாரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் குற்றம் செய்த சிறுவர்களை நல்வழிப்படுத்த, 15 நாட்கள் பணி வழங்கியது இதுவே முதல் முறையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ