கோவை : 'ஜிபே'யில், இரண்டு முறை பணம் 'டெபிட்' ஆனாதல், இழப்பீட்டுடன் திருப்பி வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ், குரும்பபாளையம் பகுதியிலுள்ள ராகம் பேக்கரியில் 2022, ஜூலை 20ல், 'சிக்கன் சாண்ட்விச்' வாங்கினார். அதற்கான தொகை, 180 ரூபாய், 'ஜிபே' வாயிலாக அனுப்பினார். மோகன்ராஜ் வங்கி கணக்கிலிருந்த பணம் 'டெபிட்'ஆனதற்கான குறுஞ்செய்தி வந்தது. ஆனால், பேக்கரியின் கேஷியர், பணம் 'கிரெடிட்' ஆகவில்லை என கூறியதால், மீண்டும் அதே தொகையை அனுப்பினார். மோகன்ராஜ் வங்கி கணக்கிலிருந்து, இரண்டு முறை பணம் எடுக்கப்பட்டதை உறுதி செய்த பிறகும், பணத்தை திரும்பித் தராமல் அலைக்கழித்தனர். பாதிக்கப்பட்ட மோகன்ராஜ், இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு, 180, ரூபாய் திருப்பி தருவதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக 10,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.