கோவை;சாலையோர வியாபாரிகள் 4,700 பேர் ஐ.டி., கார்டு பெற்றுள்ள நிலையில், அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் தாமதமின்றி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி பகுதிகளில் 2019-20ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 23 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் இருந்தனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் வங்கிக்கடன், தள்ளுவண்டி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.பிரதம மந்திரியின் 'ஆத்ம நிர்பார்' திட்டத்தில் பதிவு செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதற்கென, கடந்தாண்டு ஜூன் முதல் டிச., வரை நடந்த கணக்கெடுப்பில், 14 ஆயிரத்து, 400 சாலையோர வியாபாரிகள் இருப்பது தெரியவந்தது.இவர்களுக்கு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மார்ச் 7ம் தேதி முதல் அடையாள அட்டையும், வியாபார சான்றிதழும் தினமும் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டையை காண்பித்து இதுவரை, 4,700 பேர் அடையாள அட்டை(ஐ.டி., கார்டு) பெற்றுள்ளனர்.இன்னும், 10 ஆயிரம் பேர் பெறவேண்டியுள்ள நிலையில் தினமும் எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும், மொபைல் போன் அழைப்பு வாயிலாகவும் அழைப்புவிடுக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட அமைப்பை சேர்ந்த சிலர் வியாபாரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு ஐ.டி., கார்டு வழங்கியுள்ளனர். இந்த அட்டை செல்லத்தக்கது அல்ல எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'கணக்கெடுக்கப்பட்ட, 14 ஆயிரத்து, 400 பேரில் இதுவரை, 4,700 பேர் ஐ.டி., கார்டு பெற்றுள்ளனர். புதிதாக அடையாள அட்டை கோரும் வியாபாரிகளின் விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் ஐ.டி., கார்டு, வியாபார சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநகராட்சி பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவர். எனவே, தாமதமின்றி பெற்றுக்கொள்வது நல்லது' என்றார்.