உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4 ஆண்டுகளாக 4வது இடம்: பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் கடந்த ஆண்டைவிட 0.60 சதவீதம் குறைவு

4 ஆண்டுகளாக 4வது இடம்: பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் கடந்த ஆண்டைவிட 0.60 சதவீதம் குறைவு

கோவை:பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சியுடன் தொடர்ந்து 4 ஆண்டுகளாக 4வது இடத்தை கோவை மாவட்டம் தக்கவைத்துள்ளது. வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் உள்ள 364 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 107 மாணவர்கள், 18 ஆயிரத்து 292 மாணவிகள் என 33 ஆயிரத்து 399 பேர் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 2ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் நேற்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டன.

4-வது இடம்

இத்தேர்வில், 14 ஆயிரத்து 459 மாணவர்களும், 17 ஆயிரத்து 928 மாணவிகளும் என 32 ஆயிரத்து 387 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 95.71 சதவீதம், மாணவிகள் 98.01 சதவீதமும் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 96.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.60 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டில் கோவை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்றது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடந்த 4 ஆண்டுகளாக 4வது இடத்தை தக்கவைத்துள்ளது.இதில், 11 அரசுப் பள்ளிகள், 10 அரசு உதவிபெறும் பள்ளிகள், 147 தனியார் பள்ளிகள் என மொத்தம் 168 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.மாணவர்களுக்கு மொபைல் போன் வழியாக, மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. அரசு தேர்வுகள் துறை இணையதளம் மற்றும் அந்தந்தப் பள்ளிகள் வாயிலாக ரிசல்ட் வெளியிடப்பட்டது. ேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்கல்வி வழிகாட்டி மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப, அவர்களுக்கான விருப்ப பாடங்கள், துறைகள், முக்கிய அரசு கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் குறித்து எடுத்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது: கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து நான்காமிடத்தை தக்கவைத்துள்ளது. பள்ளிகளில் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது. தொடர்ந்து, உயர்கல்வி வழிகாட்டி மையம் அமைத்து மாணவர்களை வழிநடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

மாற்றுத் திறன் மாணவர்கள் ரிசல்ட்

கோவை மாவட்டத்தில் 206 மாற்றுத் திறன் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 191 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 97 மாணவர்கள், 94 மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஒட்டுமொத்தமாக 93 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வுக்கான பயிற்சிகள் விரைவில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருநங்கை அஜிதா பாஸ்

பிளஸ் 2 பொதுத் தேர்வை கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த அஜிதா, 18 என்ற திருநங்கையும் எழுதினார். வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவியான இவர், 373 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.இதுகுறித்து, அவர் கூறுகையில், 'மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிறிது பாதிக்கப்பட்டிருந்ததால் குறைந்த மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. இருப்பினும் தேர்ச்சி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பி.எஸ்.சி. உளவியல் துறையைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ