| ADDED : ஜூலை 11, 2024 11:22 PM
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணியதில், 63.69 லட்சம் ரூபாயும், 223 கிராம் தங்கம், 335 கிராம் வெள்ளி இருந்தது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகளை, வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணும் பணிகள் நடைபெறும். கடந்த பிப்ரவரி மாதம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு, நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் கோவிலில் நடந்தன. ஹிந்து சமய அறநிலைத்துறை சூலூர் ஆய்வாளர் வடிவக்கரசி, மேட்டுப்பாளையம் ஆய்வாளர் ஹேமலதா, காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெகநாதன், மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில், கோவிலில் வைத்திருந்த, 11 உண்டியல்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக, 63 லட்சத்து, 69 ஆயிரத்து, 397 ரூபாயும், 223 கிராம் தங்கம், 335 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. காணிக்கைகள் என்னும் பணிகளில், கோவில் ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டனர்.