உடுமலை:உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த சீசனில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த மண்டல பாசன சீசனில், கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட, 94,201 ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு சுற்றுகளாக தண்ணீர் வழங்கப்படும்.மொத்தம், 8 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு மிகாமல், 120 நாட்கள் உரிய இடைவெளி விட்டு, அணையிலிருந்து பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும்.மேலும், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான ஏழு குள பாசனத்துக்கு, நீரிழப்பு உட்பட மொத்தம், 700 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது.அரசாணையின்படி, நேற்று திருமூர்த்தி அணையிலிருந்து தளி கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.நேற்று காலை, 8:15 மணிக்கு அணையில் நடந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் கலெக்டர் கிருஸ்துராஜ், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் பாசன சபை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முதற்கட்டமாக அணையிலிருந்து பிரதான கால்வாயில், வினாடிக்கு, 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், மொத்தமுள்ள 60 அடியில், 57.21 அடி நீர் மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 889 கன அடி நீர் வரத்தும், 8 மி.மீ., மழைப்பொழிவும் பதிவாகியிருந்தது.