உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊழியர்கள் மீது தாக்குதல்; ஊரக வளர்ச்சி துறை கண்டனம்

ஊழியர்கள் மீது தாக்குதல்; ஊரக வளர்ச்சி துறை கண்டனம்

சூலூர்;ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது ஆளும் கட்சியினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை, கண்டித்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை அடுத்த சூலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துராஜூ உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மீது அரசியல் பிரமுகர்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெண் உதவி பொறியாளர் மீது ஆளும் கட்சி பிரமுகர் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கணினி உதவியாளர்களின் பணி பாதிப்பு அடையாதபடி, மாவட்ட மாறுதல் உத்தரவை செயல்படுத்த வேண்டும். அரசு உத்தரவின் படி தமிழகம் முழுக்க வண்டல் மண் எடுக்கும் போது, மதிப்பீடு செய்யும் பணி, அலுவலர்களுக்கு வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால், வருவாய்த்துறை மூலம் வண்டல் மண் எடுக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே பணிச்சுமை உள்ளதால், அந்த அறிவிப்பு மற்றும் செயல்முறைகளை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை, ஊராட்சி ஒன்றியத்தின் அதிகார வரம்பில் இருந்து, ஆய்வாளருக்கு மாற்றி, சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்துக்கு எதிரானது. எனவே சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் கூறுகையில், மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. ஊராட்சி நிதியில் தான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஊராட்சி நிதி சுரண்டப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி