உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிரம்பியது ஆழியாறு அணை 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் 

நிரம்பியது ஆழியாறு அணை 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் 

பொள்ளாச்சி,:பொள்ளாச்சி அருகே உள்ள, ஆழியாறு அணை முழு கொள்ளளவும் நிரம்பியதால், நேற்று காலை, 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணை, பி.ஏ.பி., பாசனத்தில் முக்கிய அணையாகும். நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 3,864 மில்லியன் கனஅடியாகும். மொத்தம், 120 அடி உயரம் உள்ள அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம், குடிநீர் பயன்பாடு மற்றும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், சில வாரங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 16ம் தேதி ஆழியாறு நீர்மட்டம் 91 அடியாக இருந்தது. நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 22ம் தேதி, 115.25 அடியானது. இதையடுத்து, இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.நேற்று காலை, 8:00 மணிக்கு அணையின், 120 அடி உயரத்தில், 118.65 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,227 கனஅடி நீர்வரத்தும், 578 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.இந்நிலையில், மேல் ஆழியாறு அணை, காடாம்பாறை அணைகள் நிரம்பியதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், ஆழியாறுக்கு தொடர் நீர்வரத்து அதிகரித்தது. அணையின் முழுக்கொள்ளளவும் நிரம்பிய நிலையில், அணை பாதுகாப்பு கருதி, உபரிநீரை மதகுகள் வழியாக வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.நேற்று காலை உபரி நீர் வெளியேற்றுவதற்கு முன், எச்சரிக்கை விடுக்கும் வகையில், சங்கு ஒலிக்கப்பட்டது. காலை 9:45 மணிக்கு, 11 மதகுகள் வழியாக, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மதியம், 1:50 மணி நிலவரப்படி 118.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு, 1,130 கனஅடி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.தமிழக, கேரளா எல்லையில், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு பின், அணை முழு கொள்ளளவும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை