கோவை;''கோவை மாவட்டத்தில், 15 நாட்களுக்குள் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் செய்து தரப்படும்; உட்பிரிவு பட்டா, 30 நாட்களுக்கு மாற்றித் தரப்படும்,'' என, கலெக்டர் கிராந்திகுமார் உறுதி கூறியுள்ளார்.கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:பட்டா மாறுதல் செய்வதற்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுத்திருக்கிறது. உரிமம் பெற்ற சர்வேயர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், 15 நாட்களுக்குள் செய்து தரப்படும். உட்பிரிவு செய்து பட்டா மாறுதல், ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலுவை விண்ணப்பங்கள் குறைவாகவே இருக்கின்றன.இனி, இணைய தளம் மூலமாக அப்ரூவல் வழங்கப்படும். யார் முதலில் விண்ணப்பிக்கிறார்களோ, அவர்களுக்கு முதலில் பட்டா மாறுதல் செய்து தரப்படும். பரிசீலனையின் போது, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதை விசாரிக்க, ஒவ்வொரு தாலுகாவுக்கும் துணை கலெக்டர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் உண்மையான காரணத்தை கண்டறிவார்; சரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா என ஆய்வு செய்வார். நிறைய இடங்களில், பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்துள்ள சர்வே எண்களில் தவறு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இதற்கு தீர்வு காண்பதற்கு, பத்திரப் பதிவுத்துறையினரிடம் பேசி வருகிறோம்.குளம், குட்டைகளில், 83 இடங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 26ம் தேதி வரை வந்த விண்ணப்பங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.தாலுகா அளவில் அனுமதி கொடுப்பதற்கான அரசாணை வந்திருக்கிறது; இதற்கான மொபைல் செயலி உருவாக்கும் பணி நடந்து வருகிறது. பில்லுார் அணையில் உள்ள வண்டல் மண் எடுக்க ஆலோசித்து வருகிறோம். அங்கிருந்து எடுத்து வருவதற்கு சிரமம் இருக்கிறது. சுற்றுப்பகுதியில் உள்ள நிறுவனங்கள், சமுதாய பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர்.,) எடுத்துத் தருவதாக கூறியுள்ளனர். இவ்வாறு, கலெக்டர் கூறினார்.