கோவை;கோவை, குனியமுத்தூரில் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:கள்ளக்குறிச்சியில் நாட்டு சாராயம் குடித்து, இதுவரை 35 பேர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும், 70க்கும் மேற்பட்டோர் நிலை என்னவாகும் என தெரியவில்லை. கடந்தாண்டு, விழுப்புரம், மரக்காணத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்து, 23 பேர் பலியாகினர். முதல்வர் நேரடியாக சென்று பார்த்தபின், இனிமேல் இத்தகைய சம்பவம் நடக்காது. இரும்புக்கரம் கொண்டு கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கப்படும், என்று கூறினார். ஒரு ஆண்டு ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவம் நடந்துள்ளது. தற்போது, 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க தவறிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பலர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இது வழக்கமான ஒன்றாக தெரிகிறது. மக்களை காப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக தெரியவில்லை.இச்சம்பவத்திற்கு உயரதிகாரிகளை, போலீசாரை பலிகடா ஆக்க கூடாது. முதல்வர் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மாநிலத்தில் நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்.உயிரிழந்தோருக்கு, 10 லட்சம் இழப்பீடு என்பது மனிதாபிமான அடிப்படையிலானது. இதனை கள்ளச்சாராயம் குடிக்க ஊக்குவிப்பதாக நினைக்ககூடாது. கரை வேஷ்டி கட்டாத தி.மு.க., மாவட்ட செயலாளர்களாக மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி., செயல்படுகின்றனர், அரசு ஒட்டுமொத்தமாக பதவி விலக வேண்டும். இந்த உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது. முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும், யார் மேல் வழக்கு பதிவு செய்வது? சட்டம் - ஒழுங்கை நேரடியாக கண்காணிக்கும் பொறுப்பு முதல்வரிடம் உள்ளது. அவர் பொறுப்பேற்று, பதவி விலகவேண்டும் இதுவே நியாயமான, நேர்மையான அரசியல்வாதிக்கு அழகு. தவறானவர்கள் ஆட்சியை விட்டு செல்லவேண்டும். மக்களை காக்க தவறியவர்கள் ஆட்சி நடத்த தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.பள்ளிகளிலேயே ஜாதி அடையாளங்கள் அகற்றப்பட வேண்டும். அப்போது தான் வருங்கால சந்ததி ஜாதி பாகுபாடின்றி இருக்கும், நீதிபதி சந்துரு குறிப்பிட்டிருப்பது ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு நிறத்தில் பொட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கலாம். நீதிபதி சந்துருவின் பரிந்துரையை முழுமையாக செயல்படுத்தலாம். இதில் தவிர்க்க வேண்டியது எதுவும் கிடையாது. இவ்வாறு, அவர் கூறினார்.