| ADDED : ஜூலை 04, 2024 05:03 AM
கோவை : அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில், வீட்டின் முன் இரண்டு குழந்தைகள் நேற்று முன் தினம் இரவு விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக், இரண்டு குழந்தைகள் மீதும் மோதி நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த குழந்தைகளை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், புல்லக்காடு பகுதியில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டதாகவும், பைக், லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியகடை வீதி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் புல்லுக்காடு பகுதியில், சாலை வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.