பிடிபட்டது மெத்தபெட்டமைன்
கோவை: தெற்கு உக்கடம், அன்பு நகரில் போதை பொருள் விற்றதாக, அப்துல் ஜலீல்,36, என்பவரை பிடித்து, பெரியகடை போலீசார் சோதனையிட்டனர். அவரிடம் இருந்து, 2.250 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பணத்துடன் 'எஸ்கேப்'
கோவை: பீகார் மாநிலம், கயா மாவட்டத்தை சேர்ந்தவர் பிலாந்தர்,35. இவர் நேற்று முன்தினம் கோவை ரயில்வே ஸ்டேஷனில், டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றார். உதவுவதாக, அவரை அழைத்துச்சென்ற நபர், பிலாந்தரிடம் வாங்கிய ரூ.25 ஆயிரம் ரொக்கம், இரு போன்கள் மற்றும் உடைமைகளுடன் தலைமறைவாகி விட்டார். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர். நகையை காணோம்
கோவை: பாப்பம்பட்டி பிரிவு, சந்தான லட்சுமி நகரை சேர்ந்தவர் சவுமியா,31. இவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சினிமா தியேட்டருக்கு சென்றுவிட்டு, வருமான வரி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது தான் கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. சவுமியா அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர். பணம் பறித்தவர் கைது
கோவைப்புதூர்: கோவைப்புதுாரை சேர்ந்தவர். சசிகுமார், 50; போட்டோகிராபர், நேற்று முன்தினம் பி.கே.புதூர் பகுதியில் நின்றிருந்தார். அங்கு வந்த சுகுணாபுரம் கிழக்கு, மைல்கல் பகுதியை சேர்ந்த ரீகன், 22, மது குடிக்க பணம் கேட்டார். தர மறுத்த போது, தன்னிடமிருந்த கத்தியை சசிகுமாரின் வயிற்றில் அழுத்தி, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகையை தருமாறு மிரட்டினார். சசிகுமார் நகையை கழற்றி கொடுத்த பின், அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த, 300 ரூபாயை பறித்த ரீகன் அங்கிருந்து தப்பினார். சசிகுமார் புகாரின்படி, குனியமுத்தூர் போலீசார் ரீகனை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர். கொலை மிரட்டல்; போலீசார் விசாரணை
கோவைப்புதூர்: அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 49. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், இவரது மூத்த சகோதரரை சிலர் கொலை செய்தனர். தற்போது வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில், ஜாபர் சாதிக் நேற்று முன்தினம் புட்டுவிக்கி சாலை, புற்றுக்கண் கோவில் அருகே நின்றிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் கொலையில் தொடர்புடைய நிசார், அப்துல் ஜலீல், கோபினாத், பாவா மற்றும் முஹமது ஹூசேன் ஆகியோர், தகாத வார்த்தைகளால் திட்டி, பொய்யான வாக்குமூலம் கொடுக்குமாறு மிரட்டினர். இவரது புகாரின்படி, குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். கத்தியால் குத்தி வாலிபர் காயம்
கோவை: சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் ஜீவா,27. இவர் கடந்த 24ம் தேதி தனது நண்பர் தனுசுடன், இட்டேரி சந்திப்பு அருகே, டூ வீலரில் கடைக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, இவருக்கு தெரிந்த அஞ்சுகம் நகரை சேர்ந்த தர்னேஷ் வாகனத்தை வழிமறித்து கத்தியால் ஜீவாவின் தலை, தாடை, கை, மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்படுத்தியுள்ளார்.உடனடியாக ஜீவாவை அங்குள்ள மருத்துவ மனையில் அவரது நண்பர் சேர்க்க, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜீவா அளித்த புகாரின் பேரில் தனுஷ்,19 மற்றும் உடன் இருந்து தாக்கிய அஞ்சுகம் நகரை சேர்ந்த கர்ணா(எ)கார்த்திகேயன்,24, நல்லி(எ)நலேந்திரன்,24, வினோத்குமார்,28, சிவக்குமார்,24, தர்னீஸ்,24, மற்றும் உடையாம்பாளையத்தை சேர்ந்த டில்லி(எ) மோகன்குமார்,20 ஆகியோரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.