உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அமைச்சர் தொகுதியாக மாறும் : கோவை அண்ணாமலை போட்டியிடுவதால் நம்பிக்கை

மத்திய அமைச்சர் தொகுதியாக மாறும் : கோவை அண்ணாமலை போட்டியிடுவதால் நம்பிக்கை

-நமது நிருபர்-பா.ஜ., வேட்பாளராக அண்ணாமலை நிறுத்தப்பட்டுள்ளதால், மத்திய அமைச்சரின் தொகுதியாக கோவை மாறுமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.கோவையின் தொழில் வளர்ச்சியை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, இந்த நகருக்கு மேலும் பல கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகின்றன. அதற்கு, மத்திய அரசின் ஆதரவு அவசியம். கோவை எம்.பி., மத்திய அமைச்சராகும் வாய்ப்பிருந்தால் இது சாத்தியம்.பிரதமராக ராஜிவ் இருந்தபோது, நீலகிரி எம்.பி.,யாக இருந்த பிரபு, மத்திய இணை அமைச்சராக வலம் வந்தார். ஆனால் அவரால் அருகிலுள்ள கோவைக்கு எந்தப் பெரிய திட்டங்களும் வந்ததில்லை. அதற்குப் பின்னும், முன்னும் யாருக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. சி.பி.ராதாகிருஷ்ணன், இரு முறை வென்றபோதும் அவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க.,- காங்., கூட்டணி ஆட்சி இருந்தபோதும், கோவையை சேர்ந்த எம்.பி.,க்கள் யாருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைத்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளில், ஒரு முறை அ.தி.மு.க., சார்பில் நாகராஜனும், இரு முறை மா.கம்யூ., கட்சியை சேர்ந்த நடராஜனும் இங்கு வென்றுள்ளனர். இவர்கள், கோவைக்கு திட்டங்களைக் கொண்டு வருவதை விட, இங்கு வரக்கூடிய திட்டங்களை எதிர்க்கின்ற எம்.பி.,க்களாகவே இருந்துள்ளனர். விமான நிலைய விரிவாக்கம், கோவை-கரூர் பசுமை வழிச்சாலை உள்ளிட்ட பல திட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதேபோன்று, கோவையின் தேவைகளை, லோக்சபாவிலும் இவர்கள் முழுமையாகப் பேசியதேயில்லை.இதனால் கோவைக்குக் கிடைக்க வேண்டிய மத்திய அரசின் நிதியுதவி, திட்டங்கள் கிடைக்கவே இல்லை. விமான நிலைய விரிவாக்கம், ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு, கிழக்கு புறவழிச்சாலை, கோவை-கரூர் பசுமை வழிச்சாலை, எல் அண்ட் டி பை பாஸ் விரிவாக்கம் என பல திட்டங்கள் நிறைவேற வேண்டுமெனில், மத்திய ஆட்சியில் பங்கேற்கும் கட்சி, இங்கு வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம்.அதற்கான வாய்ப்பு, முதல் முறையாகக் கிடைத்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, கோவையிலுள்ள தொழில் அமைப்பினரிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை வெற்றிபெறும் பட்சத்தில், மத்திய அமைச்சராவது உறுதி என்றும், கோவை உட்பட கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருப்பார் என்று பேச்சு எழுந்துள்ளது.அதனால், கோவை விமான நிலைய விரிவாக்கம், கோவை சந்திப்பு விரிவாக்கம் வேகமாக நடக்கும்; தன் சொந்த ஊரான கரூருக்கு கோவையிலிருந்து எட்டு வழிச்சாலை கொண்டு வரவும், மற்ற பை பாஸ் திட்டங்களை நிறைவேற்றவும் அவர் நடவடிக்கை எடுப்பார். இந்த நம்பிக்கையில் தான், கோவையின் தொழில் துறையினரும், பொது மக்கள் பலரும், பெரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

அருகருகே அமைச்சர் தொகுதிகள்!

நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.முருகன், இப்போதே மத்திய அமைச்சராகவுள்ளார். அவர் வென்றாலும், மத்திய அமைச்சரவையில் தொடரும் வாய்ப்புள்ளது. கோவையில் அண்ணாமலையும் வென்று மத்திய அமைச்சரானால், அருகருகேவுள்ள இரு தொகுதிகளும் வி.ஐ.பி.,க்கள் தொகுதிகளாகிவிடும். இவர்களிருவரும் அமைச்சராகும்போது, கொங்கு மண்டலமே மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் வகையில் திட்டங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
மார் 23, 2024 12:31

ஒரு தொகுதியின் வளர்ச்சி அந்தத் தொகுதியின் எம் பி கையில் உள்ளது என்றால் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் எல்லாம் ஏன் பின்தங்கியே உள்ளது?


venugopal s
மார் 22, 2024 18:24

சிலபல வருடங்களுக்கு பின் கஜினி முகமது தொகுதி என்றும் அழைக்கப்படும்.


anil
மார் 22, 2024 15:04

all are the same , Coimbatore people go upto ground level , they know very well and what to do


மேலும் செய்திகள்







புதிய வீடியோ