கோவை : திருட்டு போன பைக்கிற்கு இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, பி.ஆர்.எஸ்., மைதான குடியிருப்பில் வசித்து வருபவர் மல்லேஸ்வரன். பைக்கிற்கு, எஸ்.பி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான பைக் 2021, ஜூலை, 6ல் திருட்டு போனது. போலீசில் புகார் அளிக்கப்பட்டு, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.பைக்கை தேடியும் கிடைக்காததால், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்தார். பைக்கை தேடியும் கிடைக்கவில்லை என்று போலீசாரால் வழங்கப்படும் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆனதால், காப்பீடு 'கிளைம்' தொகை வழங்க மறுத்து, விண்ணப்பத்தை நிராகரித்தனர்.இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்திருப்பதால், மனுதாரருக்கு காப்பீட்டு தொகை, 12,548 ரூபாய் மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 5000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.