கோவை;நேபாள நாட்டு பெண்ணுக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை, கோவை அரசு மருத்துவமனை டாக்டர் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.நேபாளத்தை சேர்ந்த, 31 வயது பெண், கடந்த 10 ஆண்டுகளாக, கணவருடன் குன்னூரில் தோட்டவேலை செய்து வருகிறார். கடந்த மாதம், அவருக்கு தலைசுற்றல், மயக்கம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. குன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.மருத்துவமனையில், அவருக்கு 'எக்கோகார்டியோகிராபி' ஸ்கேன் செய்யபட்டது. அதில் அவருக்கு 'ஏட்ரியல் செப்டல்' எனும் பிறவி இருதய குறைபாடு(இதயத்தில் ஏற்படும் துளை) மற்றும் 'பல்மனரி' வால்வு அடைப்பு ஆகிய இரு குறைபாடுகள் கண்டறியப்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, இவ்விரு குறைபாடுகளையும் இருதய அறுவை சிகிச்சை வாயிலாக மட்டுமே சரிசெய்யும் நிலை இருந்தது. ஆனால், தற்போதுள்ள அதிநவீன சிகிச்சை வாயிலாக, தொடையில் ஒரு சிறு துளை வழியாக சரி செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி 'ஏ.எஸ்.டி., டிவைஸ் கிளோசர்' மற்றும் பலூன் பல்மனரி வால்வாடமி ஆகிய இரு வேறு நுண்ணிய சிகிச்சைகளும், வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.இச்சிகிச்சை, 'பெர்குடேனியஸ் டிரான்ஸ்கதீடர்' முறை மூலம் மேற்கொள்ளப்பட்டதால், நோயாளிக்கு திறந்த இதய அறுவை சிகிச்சையால், ஏற்படும் வலி மற்றும் ரத்த இழப்பு தவிர்க்கப்பட்டது.மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:அறுவை சிகிச்சை குறித்து இருவாரங்களுக்கு முன்னரே திட்டமிட்டு, நோயாளியின் இதயத்திலுள்ள துளையின் அளவை, 'எக்கோகார்டியோகிராபி' வாயிலாக அளவிட்டு, குறைபாடுகளை சரி செய்ய சிறப்பு சாதனத்தையும் வரவழைத்து, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இரு சிகிச்சைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் இந்த மருத்துவ வசதிகளை, பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.