கோவை:'வெளிநாட்டிற்கு இரிடியம் ஏற்றுமதி செய்து, கோடிகளில் லாபம் ஈட்டலாம்' என மோசடி செய்த தம்பதியரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, எண்ணுாரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு, அவரது நண்பரான கன்னியாகுமரியை சேர்ந்த ஆன்ட்ரோ வில்சன் வாயிலாக, கோவை இடிகரையை சேர்ந்த சியாம் ஜாய் மோகன், 44, அறிமுகமானார். ஜாய் மோகன் மற்றும் அவரது மனைவி சஜிதா, 38, ஆகியோர் தங்களிடம், விலை மதிப்பற்ற இரிடியம் இருப்பதாக, சீனிவாசனை நம்ப வைத்துள்ளனர். இதனை வெளிநாட்டில் விற்றால், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.தொடர்ந்து, இரிடியத்தை சோதனை செய்வதற்காக, அறிவியல் நுட்பம் தெரிந்த சேகர் என்பவரை அறிமுகம் செய்து வைத்து, சோதனை செய்ய சீனிவாசனிடம், 10 லட்சம் ரூபாயையும் மூவரும் பெற்றுள்ளனர்.பின்னர், ஜாய் மோகன் மூலம் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிமுகமான வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர், தங்கள் நிறுவனத்தில் பலகோடி ரூபாய்க்கு விற்றுக்கொடுப்பதாக கூறி, சீனிவாசனிடமிருந்து மேலும், 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாசன், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்க, விசாரணையும் நடந்து வந்தது. இந்நிலையில், ஜாய் மோகன், அவரது மனைவி சஜிதா ஆகியோரை கைது செய்து, இரிடியம், 4 லட்சத்து 99,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 77 கிராம் தங்க நகைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.