உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் செலவு செய்யக்கூடாது! ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தல்

நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் செலவு செய்யக்கூடாது! ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தல்

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி தொகுதியில், ஒரு வேட்பாளர், 95 லட்சம் ரூபாய்க்குள் செலவு செய்து கொள்ளலாம். அதற்கு மேல் செல்லக்கூடாது,'' என, தேர்தல் செலவின கணக்குகள் பராமரிப்பு குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின கணக்குகள் பராமரிப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்தார்.தேர்தல் பார்வையாளர் (பொது) அனுராக் சவுத்ரி, தேர்தல் பார்வையாளர் (போலீஸ்), தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலை வகித்தனர்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, வால்பாறை தேர்தல் நடத்தும் அலுவலர் நிறைமதி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் பேசியதாவது:ஒவ்வொரு வேட்பாளர்களும், தனியாக ஒரு வங்கிக்கணக்கு வைத்து பராமரித்திட வேண்டும். இந்த வங்கிக்கணக்கு வேட்பாளரின் பெயரிலோ, வேட்பாளர் மற்றும் அவரது முகவர் ஆகியோர் கூட்டாகவோ ஆரம்பிக்கலாம்.தேர்தலின் போது அரசியல் கட்சிகள், வங்கிக்கணக்குகள், வேட்பாளரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்குகள், தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படும்.ஒரு வேட்பாளர், 95 லட்சம் ரூபாய்க்குள் செலவு செய்து கொள்ளலாம். அதற்கு மேல் செல்லக்கூடாது.செலவினத்தொகை வரம்பினை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவுகளின்படியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும், அது ஊழல் செயலாக கருதப்படும்.வேட்பாளர்கள், செலவு கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்தாலோ, தாக்கல் செய்த செலவு கணக்கு சரியாக இல்லாமல், உண்மைக்கு மாறாக இருப்பது ஆய்வில் கண்டறிந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவர்; தகுதி நீக்கம், மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும்.வேட்புமனுத்தாக்கலின் போது, வேட்பாளர்களுக்கு அச்சிடப்பட்ட வரிசை எண்ணுடன், தேர்தல் செலவு கணக்கு பராமரிக்கும் பதிவேடு ஒன்று, தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது.இதனை, வேட்பாளர்கள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். ஏ,பி,சி என மூன்று வகையான கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும்.'ஏ' பிரிவில் (வெள்ளை நிறம்) தினசரி செலவின கணக்குப்பதிவேடு, 'பி' பிரிவில் (பிங்க்), நிதி ஆதாரம் குறித்து பணம் எப்படி வருகிறது என தெளிவாக குறிப்பிட வேண்டும்.நன்கொடையாக வந்ததா, வங்கி வாயிலாகவந்ததா என்பது குறித்து குறிப்பிட வேண்டும்.'சி' பிரிவில் (மஞ்சள்), வங்கிக்கணக்கு பதிவேடு ஆகியவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.தேர்தல் செலவினம் தொடர்பான ரொக்கம், காசோலை, வரைவோலை, பல்வகை மின்னணு பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான செலவினங்களும், இப்பதிவேட்டில் எழுதப்பட வேண்டும்.மற்றவரிடமிருந்தோ, கட்சியிடமிருந்தோ பெறப்படும் நன்கொடை செலவினங்களும் முழுமையான விபரங்களுடன் எழுதப்பட வேண்டும்.பொருளாகவோ, மனித உழைப்பு வாயிலாகவோ தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து வகை செலவின வகைளும், பதிவேட்டில் உள்ள தொடர்புடைய கலத்தில் எழுதி வர வேண்டும்.இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர். அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை