உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்க ஊர்ல பாம்பு, நாய்க்கடி மருந்து இருக்கா? சுகாதார நிலையத்தில் கலெக்டர் விசாரணை

உங்க ஊர்ல பாம்பு, நாய்க்கடி மருந்து இருக்கா? சுகாதார நிலையத்தில் கலெக்டர் விசாரணை

கோவை : மதுக்கரையில் நடந்த, 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' திட்டத்தில், அரசு துணை சுகாதார நிலையத்தில் நாய், பாம்புக்கடி மருந்துகள் போதுமானதாக இருக்கிறதா என்று, கள ஆய்வு செய்தார் கலெக்டர்.மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில், 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' திட்டத்தினை கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார். 9ம் வகுப்புக்குப் பின் பள்ளி செல்லாமலிருந்த இருவரது வீடுகளுக்கு சென்று, காரணத்தை கேட்டார். கல்வி பயிலும் அவசியத்தை எடுத்துக்கூறியதையடுத்து, மாணவர்கள் பள்ளி செல்வதாக உறுதியளித்தனர்.12ம் வகுப்பு முடித்து, உயர்கல்வி தொடராமல் இருந்த பிரசன்னா, பிரியதர்ஷினி ஆகிய இருவரையும் அவரது வீட்டில் சந்தித்த கலெக்டர், உயர்கல்வி தொடராமலிருப்பதற்கான காரணத்தை கேட்டறிந்தார். இருவரும் பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்தார்.திட்ட துவக்க நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில், ''இத்திட்டத்தின் கீழ், பெறும் மனுக்கள் முதல்வரின் முகவரி திட்டத்தில், பதிவு செய்து சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த முகாம் நடப்பதற்குள், அம்மனுக்கள் மீது தீர்வு காணப்படும்,'' என்றார்.மதுக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். இருப்பில் உள்ள மருந்துகள், நோயாளிகள் விபரம் குறித்து விசாரித்தார்.அரசு துணை சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை அறை, தடுப்பூசி அறை, ஆய்வகம், பிரசவ வார்டு, ஆகியவற்றை ஆய்வு செய்தார்.கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட விபரங்கள், பாம்பு கடி, நாய் கடிக்கான மருந்துகள் இருப்பு விபரம், இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் மருந்துகள் இருப்பு விபரம் குறித்து கேட்டறிந்தார். மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று விபரங்களை கேட்டறிந்தார். மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மாவுத்தம்பதி ஊாட்சியில், அமைந்துள்ள ஆதிதிராவிடர் உண்டு உறைவிட பள்ளிக்கு சென்று, மாணவர்களிடம் கலந்துரையாடினார்.நேற்று மாலை, மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)ஸ்வேதா சுமன், உதவி கலெக்டர்(பயிற்சி)அங்கத்குமார் ஜெயின், எஸ்.பி., பத்ரிநாராயணன், டி.எஸ்.பி., முரளி, மதுக்கரை தாலுகா தாசில்தார் சத்யன், நகராட்சி கமிஷனர் பிச்சைமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை