உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அல்லி குளத்தை அசிங்கப்படுத்தாதீங்க! தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தல்

அல்லி குளத்தை அசிங்கப்படுத்தாதீங்க! தன்னார்வ அமைப்புகள் வலியுறுத்தல்

அன்னுார்:அன்னுார் அல்லி குளத்தை, கழிவு நீர் குளமாக மாற்றாதீர் என, கவுசிகா நீர் கரங்கள் அல்லி குளம், ஏரி பாதுகாப்பு அமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது. அன்னுார் அருகே உள்ள கவுசிகா நீர் கரங்கள், அல்லி குளம், ஏரி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அன்னுார் தாசில்தாரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அன்னுார் பகுதியில் உள்ள அல்லி குளம் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அன்னுார் பகுதியில் இயற்கையாக இருந்த நீர் வழிப் பாதைகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், இயற்கை நீர்வழிப் பாதை சார்ந்த பகுதியில், தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில், மழைநீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள இந்த தண்ணீரையும், கழிவு நீரையும், நல்ல நீர் உள்ள அல்லி குளத்துக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்பதாக தெரிகிறது. இயற்கையான நீர்வழிப் பாதைகளை கண்டுபிடித்து, துார்வாரும் முயற்சியில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து நன்னீர் குளமான, அல்லி குளத்தில் கழிவு நீரை கலக்க ஏற்பாடு செய்வது, மிகவும் வருந்தத்தக்கது. கவுசிகா நீர்க்கரங்கள் மற்றும் அல்லிகுளம் பாதுகாப்பு அமைப்பும் இணைந்து, பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன், அல்லி குளம் சிறப்பாக துார்வாரப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீர் குளத்துக்கு வராத வகையில், வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழை நீர் சரியான வகையில் உள்ளே வர, அந்தந்த பகுதிகளில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. துார்ந்து போயிருந்த ஏரிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தண்ணீர் கொள்ளளவை அதிகப்படுத்தியும், பறவைகளுக்கான மண் திட்டுகள் அமைத்தும், குளத்தின் உட்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம். தண்ணீர் வெளியேறும் தடுப்பணை பகுதியை, சீர் செய்துள்ளோம். இந்த குளத்தை காப்பாற்ற, தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். இக்குளம் அந்த பகுதியில் மக்களின் கால்நடை மேய்ச்சலுக்கும், குடிநீர் தேவைக்கும் உகந்த வகையில் உள்ளது.குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீர் உயர்ந்து, விவசாய கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைக்கிறது. இந்த குளம் விவசாய மக்களின் உயிர் நாடியாகவும் உள்ளது. எனவே அல்லி குளத்தில், அன்னுார் பகுதியின் கழிவு நீரை விடும் திட்டத்தை மாற்றி அமைக்க, மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ