UPDATED : மார் 22, 2024 12:21 PM | ADDED : மார் 22, 2024 12:21 AM
கோவை:காலதாமதமின்றி நகர மற்றும் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு, நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும் என்று கூட்டுறவு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் கிராமப்புறங்களில் மக்கள் சேவையை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. தமிழகம் முழுக்க உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களால் நடத்தப்படும் 33 ஆயிரத்து 700 கிராம அங்காடிகளில் 30 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.பணியாளர்கள் மற்றும் சங்க அளவிலான நடைமுறை பிரச்னைகளை நிவர்த்தி செய்து கொடுக்க கோரி பலமுறை பதிவாளருக்கு பல கடிதங்களும் அதன் மீது பல சுற்று பேச்சுகளும் நடந்தன. ஆனால், நியாயமான புதிய ஊதிய உயர்வு வழங்குதல், குறைந்த ஊதியத்தில் வெளி மாவட்டங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களை சொந்த மாவட்டத்திலேயே பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.அதனால் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவையில் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தகட்டமாக உண்ணாவிரதம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.