உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் நவம்பரில் கோவையில் களை

குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் நவம்பரில் கோவையில் களை

கோவை;ஐ.எச்.எஸ்., (Indigenous Horse Society)- தமிழக அமைப்பின் சார்பில், கோவை மாவட்டத்தில், வரும் நவம்பர் மாதம், உலகின் முதல் போலோ பிரீமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் துவங்க உள்ளன. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த 2 நிகழ்வுகளின், லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி, கோவை ரேடிசன் ப்ளூ ஓட்டலில் நடந்தது. ஐ.எச்.எஸ்.,- மாநில தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''பயிற்சி தான், எல்லாவற்றுக்கும் அடித்தளம். கோவையில் நடக்க இருக்கும் இரு போட்டிகள், மிகப்பெரிய வெற்றி பெறும்,'' என்றார்.ஐ.எச்.எஸ்., தமிழக தலைவர் பாலாஜி பேசியதாவது: இந்த 2 விளையாட்டு போட்டிகளும், நவ., 20 முதல் 30ம் தேதி வரை கோவை மாவட்டம், வெள்ளானைப்பட்டி ஊராட்சியில், சர்வதேச தரத்துடன் கட்டப்பட்டு வரும், பிரத்யேக அரங்கில் நடைபெறும்.உலகில் முதல் முறையாக, ஐ.பி.எல்., மற்றும் டி.என்.பி.எல்., போல, இந்த போலோ பிரீமியர் லீக் அமைக்கப்பட்டுள்ளது. 6 அணிகள் தமிழகத்தின் பிரபல நகரங்களை முன்னிறுத்தி பங்கேற்கும்.போட்டிகளை மதிப்பீடு செய்ய, நிபுணத்துவம் பெற்ற நடுவர் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, மிகப்பெரிய பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டிகளை, ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் காண்பதோடு, பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சேனல்கள், ஓ.டி.டி., தளங்களில் பார்க்க ஏதுவாக, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.நடிகர் பிரசாந்த், 'எக்ஸ்போ வெண்' குழுமத்தின் தலைவர் மகேந்திரன், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், எமரால்டு குழுமத்தின் இயக்குனர் நிஷ்டா ஸ்ரீ ஸ்ரீனிவாசன், ஐ.எச்.எஸ்., அமைப்பின் தென்னிந்திய கன்வீனர் நவநீத் ராஜ் மற்றும் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி உடனிருந்தனர்.

நடிகர் பிரசாந்த் கூறுகையில், ''கிரிக்கெட்டில் ஐ.பி.எல்., வரும், அது இவ்வளவு வெற்றியடையும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அதுபோல, இந்த போலோ பிரீமியர் லீக், நிச்சயம் பேசப்படும். குதிரையேற்றம் உடல் நலனுக்கு உற்சாகம் தரக்கூடிய விளையாட்டு. நான் சிறுவயதில் இக்கலையை கற்றுள்ளேன். என்னுடைய பல திரைப்படங்களிலும், குதிரையேற்றம் இடம் பிடித்திருக்கும். தற்போது, இந்த விளையாட்டு கோவையில் நடத்தப்படுவது பெருமையாக உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி