பொள்ளாச்சி;ரேஷன்கடைகளில் இந்த மாதமும், பருப்பு, பாமாயில் கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள்.கோவை மாவட்டத்தில், 1,540 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக,ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாதம் தோறும் அரிசி,பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த மாதம் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி, ரேஷனில் பொருட்கள் வழங்கப்படவில்லை. ஸ்டாக் இருந்த பொருட்களை மட்டுமே வழங்கினர். குறிப்பாக, பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை.கடந்த மாதம் பருப்பு,பாமாயில் வாங்காத கார்டுதாரர்களுக்கு, இந்த மாதம் சேர்த்து வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால்,இந்த மாதம் வழங்க வேண்டிய பொருட்களே, இன்னும் கடைகளுக்கு சப்ளை செய்யப்படவில்லை.ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவது வழக்கம்.இந்த மாதம் இதுவரை பருப்பு, பாமாயில் சப்ளை செய்யப்படவில்லை. அரிசி மட்டும்தான் இருப்பு உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து,அரிசியை தவிர, மற்ற எந்த பொருட்களும் இல்லை என்றுதான், கார்டுதாரர்களுக்கு சொல்லி வருகிறோம். இந்த மாதமும் அதே நிலைதான் உள்ளது' என்றனர்.கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ''இந்த மாதம் வழங்க வேண்டிய பருப்பு, பாமாயில் இந்த வாரத்தில் வந்து விடும்.''கடந்த மாதம் வாங்காதவர்களுக்கு, இந்த மாதம் சேர்த்து வழங்க வாய்ப்பில்லை. அரசு தரப்பில் வழங்க சொல்லி உத்தரவு எதுவும் வரவில்லை. வந்தால் வழங்குவோம்,'' என்றார்.கடந்த வாரமும் இதே பதிலைதான், மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.