உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் எம்.எல்.ஏ., மரணம்

முன்னாள் எம்.எல்.ஏ., மரணம்

கோவை:கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மலரவன் காலமானார்.கோவை, கணபதி பாரதி நகரை சேர்ந்தவர் மலரவன், 75; கடந்த, 2001ம் ஆண்டு அ.தி.மு.க., சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டு, வெற்றி பெற்றார். 2006ம் ஆண்டு கோவை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு இந்த தொகுதி மறுசீரமைக்கப்பட்டு கோவை வடக்கு தொகுதி என மாற்றப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிட்ட மலரவன், மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த, 2020ம் ஆண்டு முதல் உடல் நலக்குறைவு காரணமாக அவர் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம், 12:00 மணியளவில் காலமானார். அவரது உடலுக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியினர், பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை 4:00 மணியளவில் அவரது உடல் சரவணம்பட்டியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு சியாமளா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

பெயர் காரணம்

மலரவனின் இயற்பெயர் தங்கவேல். அரசியலுக்கு வரும் முன், கோவிலுக்கு வெளியே பூ கட்டி வியாபாரம் செய்து வந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அவர், எம்.ஜி.ஆர்., கோவைக்கு வரும்போது எல்லாம் ஆளுயர ரோஜா மாலையை தன் கையால் பின்னி அவருக்கு அணிவிப்பார். எம்.ஜி.ஆர்., அவரை அழைக்கும்போது, 'மலர் அவனைக் கூப்பிடுங்க' என்பார். நாளடைவில் எம்.ஜி.ஆர்., அவருக்கு மலரவன் என பெயர் சூட்டினார். அந்த பெயரை கெஜட்டில் பதிவு செய்துக் கொண்டு மலரவனாகவே வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ