உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோதனையில் சிக்குது கஞ்சாவும், மதுவும்...அதிகாரிகள் ஆதரவு! முழுமையாக வெளியிடாமல் ஏன் மறைப்பு?

சோதனையில் சிக்குது கஞ்சாவும், மதுவும்...அதிகாரிகள் ஆதரவு! முழுமையாக வெளியிடாமல் ஏன் மறைப்பு?

கோவை;தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படையினரிடம் பணம், நகைகள் மட்டுமின்றி கஞ்சா, மது போன்ற போதை பொருட்களும் பிடிபடுகின்றன. தேர்தல் நேரம் என்பதால், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமலிருக்க, இது குறித்த தகவல் முழுமையாக வெளியிடப்படுவதில்லை. வர்த்தகர்களிடம் பிடிபடும் பொருட்கள் குறித்த விபரம் மட்டுமே, வெளியில் தெரியவருகிறது.தமிழகத்தில் வரும், 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி மார்ச் 16ல் வெளியிட்டதில் இருந்து, நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.தனி நபர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்புக்கு மேலான பரிசுப்பொருட்கள் கொண்டு செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர்வதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களோ கொண்டு செல்வதை தடுக்க, தேர்தல் ஆணையத்தால் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுவினர் மூன்று 'ஷிப்ட்' முறையில், 24 மணி நேரமும், பணியாற்றி வருகின்றனர்.இதுநாள் வரை அரசியல்வாதிகள் எடுத்துச் சென்ற பணத்தையோ, பரிசுப் பொருட்களையோ பறிமுதல் செய்யவில்லை.மாறாக, வர்த்தக நோக்கத்துக்காக வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பொருட்களை, பில் இல்லாமல் கொண்டு செல்லும் ஒரே காரணத்துக்காக, பறிமுதல் செய்து, அவர்களை தொந்தரவு செய்து, மறுநாள் எழுதி வாங்கிக் கொண்டு ஒப்படைக்கின்றனர்.நேற்று முன்தினம், கோவை வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணித்த, நிலையான கண்காணிப்பு குழுவினர், 46 'ஸ்மார்ட்' வாட்ச்களை ஒருவர் பில் இல்லாமல் கொண்டு சென்றதால், பறிமுதல் செய்தனர்.

வியாபாரிகளுக்கு பாதிப்பு

விசாரணைக்கு பின், பில் சமர்ப்பித்ததும், 'ஸ்மார்ட்' வாட்ச் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, மன உளைச்சல் ஏற்படுவதோடு, தேவையின்றி அலைக்கழிப்பதால், அச்ச உணர்வுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால், வியாபாரம் சரிந்து வருவதாக, வியாபாரிகள் புலம்புகின்றனர்.

துப்பாக்கி, மது, கஞ்சா

நேற்று முன்தினம், 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 6 இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு இடத்தில், ஏர் பிஸ்டல் ஒன்றும், இன்னொரு இடத்தில், 'ஸ்மார்ட் வாட்ச்'களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மீதமுள்ள ஐந்து வழக்குகளில், என்ன பறிமுதல் செய்யப்பட்டது என்கிற விபரங்களை, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவுக்கு உட்பட்ட, கணக்கு பிரிவு அதிகாரிகள் மறைத்து விட்டனர்.பறக்கும் படையினர் சோதனை செய்யும்போது, கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள், போதை வஸ்துக்கள் சிக்குகின்றன. ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமலிருக்க, இது குறித்த தகவலை முழுமையாக வெளியிட, தேர்தல் பிரிவினர் தயக்கம் காட்டுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

5 கோடி ரூபாய் மர்மம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று முன்தினம் (ஏப்., 8) வரை, 307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 கோடியே, 4 லட்சத்து, 21 ஆயிரத்து, 65 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில், 237 வழக்குகளுக்குரிய, 6 கோடியே, 86 லட்சத்து, 71 ஆயிரத்து, 1 ரூபாய் மட்டும் விடுவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், 70 வழக்குகளுக்குரிய, 5 கோடியே, 17 லட்சத்து, 50 ஆயிரத்து, 64 ரூபாய் விடுவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venkatakrishna
ஏப் 11, 2024 15:19

ஆளும் கட்சி யாராக இருந்தாலும் காவல்துறை மற்றும் அதிகாரிகள் தேர்தல்களில் முடிந்தவரை விஸ்வாசமாக இருப்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் ஆளும்கட்சி ஆட்களிடம்தான் பணி செய்யவேண்டும்


M Ramachandran
ஏப் 10, 2024 18:42

இது நாள் வரை போலீஸு இவ்வளவு தூரம் இந்த அளவிற்கு ஆளும் கட்சிக்கு ஏஜெண்டாகா நடந்ததில்லை வர வர இப்பாடி போய் கொண்டிருந்தால் போலீசின் மீதுள்ள நம்பிக்கைய போய் விடும்


N SASIKUMAR YADHAV
ஏப் 10, 2024 09:09

தமிழகத்தை ஆளுங்கட்சியான திமுகவே போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும்போது அதாவது ஆளுங்கட்சி அதிகார வர்க்கம் ஆதரவாக இருக்கும்போது அதிகாரிகள் என்ன செய்ய முடியும். நேர்மையான அதிகாரியாக இருந்தால் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது. அதிகாரியும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருந்தால் என்ன செய்ய முடியும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை