கோவை, : 'ஆட்டை கடித்து... மாட்டை கடித்து... மனிதனையும் கடித்து...' என்பது பழமொழி. அதற்கு மாறாக, மக்களிடம் நகை, பணம் திருட்டு போய், இன்று ஆடு, மாடு திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது விவசாயிகளுக்கு வேதனை அளித்துள்ளது.கோவை புறநகரில் மட்டுமின்றி நகரிலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நம்பி நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பிழைப்பை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தொண்டாமுத்துார், வடவள்ளி, சுந்தராபுரம், சிங்காநல்லுார், சூலுார் உள்ளிட்ட இடங்களில் கால்நடை விவசாயிகள் அதிகம் உள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் மாநகர பகுதிகளில் மட்டும், 16 ஆடுகள் திருடுபோய் உள்ளதாக போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த, 16ம் தேதி முதல் பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி, பாடசாலை வீதியில் மூன்று ஆடுகள், வடவள்ளி, காந்திநகர், நால்வர் நகரில் நான்கு ஆடுகள் காணாமல் போய் உள்ளன.வடவள்ளி திருமுருகன் நகரில் மூன்று, குனியமுத்துார், சுகுணாபுரம் பகுதியில் இரண்டு, சுந்தராபுரத்தில் மூன்று ஆடுகள், இரவு நேரங்களில் காணாமல் போய் உள்ளன. வடவள்ளி, அண்ணா நகரில் வீட்டின் முன் கட்டி வைத்திருந்த இரண்டு ஆடுகளை, பட்டப்பகலில் 'ஆட்டைய' போட்டுள்ளனர்.பி.என்.புதுார், சென்னிமலை ஆண்டவர் நகரில் காலியிடத்தில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு ஆடுகளை காணவில்லை. திருடு நடந்த பெரும்பாலான இடங்களில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதுபோன்ற இடங்களை குறிவைத்து, ஆடு கடத்தும் கும்பல் தொடர்ந்து அத்துமீறி வருகிறது.மாநகர போலீசார் கூறியதாவது:திருட்டு சம்பவங்கள் பெரும்பாலும் நள்ளிரவு, 1:00 முதல் 3:00 மணிக்குள் நடக்கின்றன. ஆடு திருடுவோர் தனியாக வருவதற்கு வாய்ப்பில்லை. இரு சக்கரம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில், துணையுடன் வந்து ஆடுகளை பிடித்து செல்லவே வாய்ப்புகள் அதிகம்.ஈச்சனாரியில் வீட்டின் வெளிக்கதவை பூட்டிவிட்டு, மூன்று ஆடுகளை திருடி சென்றுள்ளனர். ஏன் என்றால், ஆடுகளின் சத்தம் கேட்டு உடனடியாக உரிமையாளர் வெளியே வரமுடியாது. இறுதியில், கதவை உடைத்து உரிமையாளர் வெளியே வந்துள்ளார். அதற்குள் ஆடுகளை திருடிசென்றுவிட்டனர்.கால்நடை வளர்ப்போர் 'சிசிடிவி' உள்ளிட்ட கண்காணிப்பு அம்சங்களையும், கொட்டைகளை சுற்றி பாதுகாப்பு வேலிகளை நிறுவுவதும் நல்லது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கால்நடை வளர்ப்போர் இனி உஷாராக இருப்பது அவசியம் என, எச்சரிக்கின்றனர் போலீசார்.
தோலை உரிச்சிருவாங்க!
ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்காக, சந்தை களில் ஆடு விற்பனை அதிகமாக நடப்பது வழக்கம். எனவே, இடைப்பட்ட நாட்களில் ஆடுகளை திருடு பவர்கள், சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்க வாய்ப்புகள் அதிகம். இறைச்சிக்கடைகளில் ஆட்டின் தோலை உரித்துவிட்டால் கண்டுபிடிப்பதும் கடினம்.