கோவை;கடந்த ஒருவாரத்தில் பருவமழையால், சிறுவாணி அணையின் நீர்மட்டம், ஐந்து அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம், 31 அடியாக உள்ளது.கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர் மட்டம், படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த, 13ம் தேதி அடிவாரத்தில், 17 மி.மீ., மற்றும் அணைப்பகுதியில், 73 மி.மீ., மழை பதிவாக, நீர் மட்டமானது, 30 அடியாக உயர்ந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 18 மி.மீ., மழையும், அணைப்பகுதியில், 44 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம், 31 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 6.1 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று கனமழை பெய்துள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை அளவு:வேளாண் பல்கலை - 2.40, பில்லுார் அணை , 7, கோவை தெற்கு தாலுகா, 1, மதுக்கரை தாலுகா, 2, போத்தனுார், 1 மி.மீ.,பொள்ளாச்சி, 19.40, மாக்கினாம்பட்டி, 26, கிணத்துக்கடவு, 8, ஆழியார், 20.20, சின்கோனா, 52, சின்னக்கல்லார், 127, வால்பாறை பி.ஏ.பி., 94, வால்பாறை தாலுகா, 91, சோலையாறு, 76 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அணைகளின் நிலவரம்: சோலையாறு அணையின் நீர்மட்டம், 115 அடி, பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 26.15 அடி, அழியார் அணையின் நீர்மட்டம், 88.60 அடி, பவானி சாகர் அணையின் நீர்மட்டம், 70.02 அடியாக உள்ளது.