| ADDED : மே 03, 2024 10:59 PM
அன்னுார்;வீட்டு மின்இணைப்பு கோரி, பொதுமக்கள் மாதக்கணக்கில் மின்வாரிய அலுவலகத்துக்கு நடக்கின்றனர். மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகி உள்ளன. 'லே அவுட்'கள் புதிதாக அமைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, புதிய மின் இணைப்புக்கு அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்து உரிய டெபாசிட் தொகை செலுத்தியும், மின் இணைப்பு தராமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.விண்ணப்பதாரர்கள் கூறுகையில், 'கடந்த மார்ச் மாதம் அனைத்து ஆவணங்களுடன், கரியாம்பாளையத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். டெபாசிட் தொகையும் செலுத்தி விட்டோம். ஆனால், மின் மீட்டர் இல்லை, கம்பி இல்லை, என, ஏதாவது காரணம் கூறி மாதக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர். இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். அரசு விரைவில் புதிய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.