| ADDED : ஏப் 21, 2024 12:55 AM
மீண்டும் திரையிடப்பட்டுள்ள கில்லி படத்துக்கு, ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒரு திரைப்படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.'சே நம்மாளு இந்த படத்துல கலக்கிட்டாருப்பா' என்றும், 'என்னதான் சொல்லு அந்தப்படம் மாதிரி வராதுப்பா' என்றும், ரசிகர்களின் மனதில் எப்போதும் அந்தப் படம் நிலைத்திருக்கும்.அப்படிப்பட்ட படங்களை, தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கும் இருக்கும். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக, அவ்வப்போது அத் திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்படுவது உண்டு.அந்த வகையில், நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம், மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. இரண்டாம் முறையாக வெளியிடப்பட்டாலும், தற்போதும் கூட்டத்துக்கு குறைவில்லை.2004ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், வசூலில் சக்கைப்போடு போட்டது. நடிகர் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து, தொடர்ந்து அவர் ஆக் ஷன் படங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கினார்.தற்போது அவர் அரசியல் கட்சியைத் துவங்கியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டு அதன் வாயிலாக, ரசிகர்களை தன்வசம் இழுப்பதற்கான முயற்சியாகவே, இந்த திடீர் ரிலீசை நடுநிலையாளர்கள் கணிக்கின்றனர்.