மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள, பாதாள சாக்கடை திட்டப் பணிகளில், வெள்ளோட்டம் துவங்கியுள்ளன.மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரின், ஒட்டுமொத்த கழிவு நீரை சேகரித்து சுத்தம் செய்ய, 'பாதாள சாக்கடை திட்டம்' அமைப்பது என நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.துவக்கத்தில், 91 கோடி ரூபாயாக இருந்த இத்திட்டத்துக்கு தமிழக அரசு, 100 கோடி ரூபாயாக நிதியை உயர்த்தி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டப் பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முன்னின்று செய்து வருகிறது. இந்த பணிகள் 8 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. கழிவு நீர் குழாய்கள் பதித்தல், சேமிப்புத் தொட்டிகள், கழிவு நீரேற்று தொட்டிகள் என கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன. நகரில் ஆறு இடங்களில் பெரிய அளவிலான கழிவுநீரேற்று நிலையங்களும், எட்டு இடங்களில் சிறிய கழிவு நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கழிவுநீர் வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள, இரண்டு ராட்சத தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது.பின்பு அங்கிருந்து நகராட்சி குப்பை கிடங்கில் அமைத்துள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, பம்பிங் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்தின் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து இத்திட்டத்தின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மஞ்சுளா கூறியதாவது: நகராட்சி குப்பை கிடங்கில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரை, செயற்கை காற்றின் அழுத்தம் வாயிலாக கழிவு நீர் சுத்தம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் எவ்வித வாசம் அடிக்காமல் உள்ளது. அதனால் இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் வாயிலாக, 76 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்தம் செய்ய திறன் உள்ளது. தற்போது வெள்ளோட்டம் நடைபெறுவதால், 40 லட்சம் லிட்டர் மட்டுமே கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.நகரில் இதுவரை 2500 வீடுகளுக்கு மட்டுமே, கழிவு நீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கு இணைப்பு வழங்கி, ஒட்டுமொத்த கழிவு நீரும், சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பொழுது, முழு அளவில் கழிவுநீர் சுத்தம் செய்யப்படும்.மீதமுள்ள வீடுகளில் இருந்து, கழிவுநீர் குழாயை, பாதாள சாக்கடை திட்ட மெயின் குழாயுடன், இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் செய்து முடித்த பின்பு, திட்டப்பணி முழு வீச்சில் நடைபெறும். இவ்வாறு உதவி செயற்பொறியாளர் கூறினார்.