உள்ளூர் செய்திகள்

மிரட்டும் நாய்கள்

1. மிரட்டும் நாய்கள்

பொன்னையராஜபுரம், 72வது வார்டு, இரண்டாவது வீதியில், கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.- மகிலா, பொன்னையராஜபுரம்.

2. மின்விபத்து அபாயம்

வீரபாண்டி, சக்தி நகர், நான்காவது வீதியில், மின்கம்பத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுவிட்ச் பாக்சிற்கான ஒயர்கள் திறந்தநிலையில் உள்ளது. வெளியே இருக்கும் மின்ஒயர்களால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குழந்தைகள் தொடும் உயரத்தில் உள்ளதால், உடனடியாக சரிசெய்ய வேண்டும்.- வேலுச்சாமி, வீரபாண்டி.

3. மூட்டை மூட்டையாய் குப்பை

போத்தனுார், மேட்டூர், 100வது வார்டு, ரயில்வே கேட் அருகே, குப்பை மூட்டை, மூட்டையாய் குவிந்துள்ளது. கழிவுகளால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்றி மீண்டும் இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சரணவன், போத்தனுார்.

4. போக்குவரத்து நெரிசல்

சரவணம்பட்டி, 11வது வார்டு, அம்மன்கோவில் அருகே, குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் அட்டை, பிளாஸ்டிக் கம்பெனிகளுக்கு வரும் கனரக லாரிகள் சாலையில் பலமணி நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- புதியவன், சரவணம்பட்டி.

5. சாயக் காத்திருக்கும் பழைய மரம்

கணபதி, சங்கனுார் ரோடு, பதிகவுண்டன்தோட்டம், தண்டுமாரியம்மன் கோவில் அருகில் சர்ச் அருகே பெரிய பழைய மரம் ஒன்று காய்ந்த நிலையில் உள்ளது. காய்ந்த கிளைகள் மின்ஒயர்கள் மீதும், சாலையிலும் விழுகிறது. கீழே உள்ள வீடுகளில் வசிப்போர் அச்சத்துடன் உள்ளனர். மரத்தை பாதுகாப்பாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.- பிரேம்குமார், கணபதி.

6. நடக்க கூட முடியாது

ஜி.என்.,மில்ஸ் போஸ்ட், பொன்விழா நகர், உருமாண்டம்பாளையம், 13வது வார்டில், மண்சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மழைக்காலத்தில் தொடரும் இந்த பிரச்னையால், குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இப்பகுதியில், விரைந்து தார் சாலை வசதி அமைத்து தர வேண்டும்.- ராமமூர்த்தி, ஜி.என்.,மில்ஸ்.

7. குப்பை குவிப்பு

காந்திபுரம், எட்டாவது வீதியில், தெருக்களில் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. கழிவுகள் கால்வாயில் அடைத்து நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வள்ளி, காந்திபுரம்.

8. வீணாகும் மின்சாரம்

ஒண்டிப்புதுார், இருகூர் செல்லும் மேம்பாலத்தில், உயர்கோபுர மின்விளக்குகளில் முறையாக விளக்குகள் அணைக்கப்படுவதில்லை. பகலிலும் எரியும் விளக்குகளால் பெருமளவு மின்சாரம் வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விவேக், ஒண்டிப்புதுார்.

9. கடும் துர்நாற்றம்

அவிநாசி ரோட்டில், அண்ணா சிலை அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், சாலை சேறும், சகதியுமாக இருப்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.- தங்கவேல், காந்திபுரம்.

10. தரைக்கு மேலே மின்கேபிள்கள்

வெரைட்டிஹால் ரோடு, அய்யண்ணன் வீதி, போலீஸ் குவாட்டர்ஸ் எதிர்புறம், புதைவட மின் இணைப்பு கேபிள் ஒயர்கள் சாலை அடியில் செல்லாமல், தரைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ளது. வண்டிகள் செல்வதால், பிளாஸ்டிக் பைப் உடைந்து, கேபிள் வெளியே தெரிகிறது. மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- வினோதினி, அய்யண்ணன் வீதி.

11. டெங்கு பரவும் வாய்ப்பு

சங்கனுார், கண்ணப்பன் நகர், கடந்த மூன்று மாதங்களாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யவில்லை. கால்வாய் நிரம்பி, சாலையில் தேங்கி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. சுகாதார சீர்கேட்டால், குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- சங்கவி, கண்ணபன்நகர்.

கார்மேல் நகரில் கும்மிருட்டு

குறிச்சி டிவிசன், கார்மேல் நகர் பகுதியில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக கம்பங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. மழைக்காலங்களில் இரவு, 7:00 மணிக்கு மேல் தெருக்களில் நடக்கவே முடியவில்லை.- ஹரி, குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை