உலர் களங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள, உலர் களங்களை எவ்வித கட்டணமுமின்றி பயன்படுத்திக் கொள்ள, விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் கூறியதாவது:தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இரண்டு உலர் களங்கள் உள்ளன. இந்த உலர் களங்களில் விவசாயிகள் எவ்வித கட்டணமுமின்றி, தங்களின் விளை பொருட்களை உலர வைத்து கொள்ளலாம்.விளை பொருட்களுக்கு, உரிய விலை கிடைக்காத காலங்களில், இங்குள்ள 2,700 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, இரண்டு கிடங்குகளில் இருப்பு வைத்து, உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம்.இங்கு இருப்பு வைக்கும் விளை பொருட்களின் பெயரில், விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் வழங்கப்படும்.அதேபோல, வியாபாரிகளுக்கு, 9 சதவீத வட்டியில், 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை, 95661 69829 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.