| ADDED : ஆக 04, 2024 10:20 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு சிலர் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில், நீளமான இரும்பு கம்பிகளை எவ்வித பாதுகாப்புமின்றி எடுத்துச் செல்கின்றனர்.ராஜாமில் ரோட்டில் சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்ற இரும்பு கம்பிகள், திடீரென நடுரோட்டில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனம் பின் மற்ற வாகனங்கள் இல்லாததால் விபத்துகள் ஏற்படவில்லை. இதனால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாகனத்தில் வந்தோர், கம்பிகளை மீண்டும் கட்டி எடுத்துச் சென்றனர்.கம்பியை பாதுகாப்பாக கட்டாமல் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'சரக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் இரும்பு கம்பியை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவும் அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.கம்பிகள் சரிந்தால், எதிரே வருபவர்களை பதம் பார்ப்பதுடன், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது,' என்றனர்.