| ADDED : ஜூலை 29, 2024 08:26 PM
போத்தனூர்:அரிசி மில் உரிமையாளரை கடத்தி, 23 ஆயிரம் ரொக்கத்தை பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர். உக்கடம் அருகேயுள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 35: அரிசி மில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டிற்கு வந்த ஜியா, சிக்கந்தர்பாஷா ஆகியோர் இவரை வெளியே வருமாறு மொபைல் போன் மூலம் அழைத்தனர். வெளியே வந்தவரிடம் அவரது மொபைல்போனை சிக்கந்தர்பாஷா பிடுங்கினார். மேலும் அரிசி கடத்தல் குறித்து யாருக்கேனும் தகவல் கூறினாரா என கேட்டுள்ளார். ஜாபர் சாதிக் அதனை மறுத்துள்ளார்..அப்போது காரில் வந்த தவுபிக், 39, முஹமது அசாருதீன்,35, உள்ளிட்ட ஐந்து பேர் இவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினர். மேலும் காரில் ஏற்றி, குனியமுத்தூர், பாலக்காடு மெயின் ரோடு அருகேயுள்ள கார் பெயின்டிங் ஒர்க் ஷாப்பிற்கு கடத்திச் சென்றனர். நைலான் கயிற்றால் கட்டி, தாக்கினர். மேலும் அவரிடமிருந்த, 23 ஆயிரம் ரூபாயை பறித்து, அங்கிருந்து துரத்திவிட்டனர். ஜாபர் சாதிக் புகாரில் குனியமுத்தூர் போலீசார் சிக்கந்தர்பாஷா, தவுபிக் மற்றும் முஹமது அசாருதீன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் நான்கு பேரை தேடுகின்றனர்.