மொபைல் போனை சிறிது நேரம் அணைப்போம்
'கார்பன்' உமிழ்வை தடுக்க, மூன்று கல்லுாரிகள் மொபைல் போன்களை அணைத்து முன்னெடுக்கும் நிலையில் இதர கல்லுாரிகளும் முன்னெடுக்க, சூழல் ஆர்வலர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பருவநிலை மாற்றத்தால் மழை பொய்த்துப்போதல், வெப்பம் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.தற்போது, மொபைல் போன்களும் கார்பனை வெளியிட்டு, சுற்றுச் சூழலை பாதிப்பது எச்சரிக்கை மணியாக உள்ளது. இதை தவிர்க்க, கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், பேராசிரியர்கள் மொபைல் போன்களை அணைத்து, 'கார்பன்' உமிழ்வை கட்டுப்படுத்த களம் இறங்கியுள்ளனர்.கோவை அரசு கலைக் கல்லுாரியில், நேற்று முன்தினம் 'மெய்நிகர் மரம் நடுதல்' என்ற பெயரில், கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் இரண்டு மணி நேரம், மொபைல் போன்களை அணைத்து வைத்தனர்.அரசு கலைக் கல்லுாரி பிளாஸ்டிக் ஒழிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வசந்தி கூறியதாவது:மொபைல் போன் வெளியிடும் 'கார்பன்' உமிழ்வை கட்டுப்படுத்த, 2,000 மாணவர்கள் இரண்டு மணி நேரம் மொபைல் போனை அணைத்து வைத்தனர். இதனால், 240 கி.கி., அளவுக்கு கார்பன் உமிழ்வு, ஒரே நாளில் குறைந்தது.இந்த, 240 கி.கி., கார்பன் உமிழ்வை, 9 மரங்கள் வாங்கிக்கொள்ளும். எங்கள் கல்லுாரியில் காலை, மதியம் என இரு சுழற்சிகளில், 5,473 மாணவர்கள் பயில்கின்றனர்.அடுத்த மாதம், இரு சுழற்சிகளிலும் தினமும் தலா இரண்டு மணி நேரம், மொபைல் போன்களை அணைத்து வைக்க உள்ளோம்.இதனால், தினமும், 960 கி.கி., வரை எங்கள் கல்லுாரி வளாகத்தில் மட்டும் கார்பன் உமிழ்வு குறைக்கப்படும். மாவட்டத்தில் ஏற்கனவே இரு கல்லுாரிகளில், இதுபோன்று மாணவர்கள் களம் இறங்கியுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
களம் இறங்க எதிர்பார்ப்பு
கோவை மாவட்டத்தில், 150க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. அனைத்து கல்லுாரிகளிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், களம் இறங்கினால், பல ஆயிரம் கி.கி., கார்பன் உமிழ்வு தினமும் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.