கோவை;கோவை புரோசோன் மால் சார்பில், 10 கி.மீ., 5 கி.மீ., மற்றும், 1 கி.மீ., கோ கிரீன் மராத்தான் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.இதில், 3,000க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் மற்றும், 35 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 10 கி.மீ.,மராத்தான், புரோசோன் மால் பகுதியில் இருந்து துவங்கி சத்தி ரோடு, துடியலுார் ரோடு, அத்திப்பாளையம் ரோடு, மணியகாரன்பாளையம் ரோடு வழியாக மீண்டும் சத்தி ரோட்டை அடைந்து, புரோசோன் மாலில் முடிவடைந்தது.அதேபோல, 5 கி.மீ., மராத்தான் புரோசோன் மால் பகுதியில் துவங்கி, சரவணம்பட்டி அரசு பள்ளி வரை சென்று திரும்பி, மீண்டும் புரோசோன் மாலை வந்தடைந்தது.10 கி.மீ., பெண்கள் பிரிவில், ஊட்டியை சேர்ந்த சரோஜ், ஆண்கள் பிரிவில் பெங்களூருவை சேர்ந்த சிவம்யாதவ், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வேலுசாமி, மகேஸ்வரி ரஞ்சித், ஜெயபிரியா, 5 கி.மீ., ஆண்கள் பிரிவில் சதீஷ், பெண்கள் பிரிவில் கவுசிகா, 1 கி.மீ., சிறுவர்கள் பிரிவில் தரணிஸ், நிவேதா, தக் ஷா ஆகியோர், முதலிடத்தை பிடித்தனர்.அவர்களுக்கு, ரொக்க பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், கோவை மாவட்ட தடகள பொருளாளர் சரண்சிங்ராயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.