கள்ளச்சாராய புகார் எழுந்துள்ள மாவடப்பு மலைக்கிராமத்தை சுற்றியுள்ள பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீஸ், வனத்துறையினர் காவல் காத்து வருகின்றனர். 'அங்கு ஆபரேஷன் போய்க்கொண்டிருக்கிறது' என, வனத்துறையினர் தெரிவிப்பதால் மர்மம் நீடிக்கிறது.கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகா, மஞ்சநாயக்கனூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மகேந்திரன் மற்றும் டீ கடை நடத்தும் ரவிச்சந்திரன் ஆகியோர் சாராயம், மது அருந்தியதால் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சாராயம் காய்ச்சி விற்கப்பட்டதாக கூறப்படும் திருப்பூர் மாவட்டம், உடுமலை, மாவடப்பு வனப்பகுதி முழுவதும் வனத்துறை மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு வெளிநபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. 'தினமலர்' குழுவினர் செங்குத்தான மலைப்பகுதியில் கால்நடையாக ஏறி உண்மையை வெளியுலகிற்கு கொண்டுவந்தது; நேற்றைய நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.இந்நிலையில், இரண்டாவது 'தினமலர்' குழு பொள்ளாச்சி, அட்டகட்டி, காடம்பாறை சோதனைச் சாவடி, மேல் ஆழியாறு வழியாக, வாகனத்தில் மாவடப்பு நோக்கி வாகனத்தில் நேற்று முன் தினம் பயணித்தது. வனத்துறையிடம் அனுமதி பெற ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டபோது, 'பொள்ளாச்சி மாவட்ட வன அலுவலரை தொடர்பு கொள்ளுங்கள்' என்றார். அதன்படியே, தொலைபேசியில் பேசி வாய்மொழி அனுமதி பெற்று பயணித்தது.காடம்பாறை சோதனைச்சாவடியில் இருந்து 14 கி.மீ., தூரத்தில் அமைந்திருந்தது மாவடப்பு மலைக்கிராமம். ஏறத்தாழ 7 கி.மீ., வரை தார்ச்சாலை இருந்தது. வழியில் புலிகள் கணக்கெடுப்புக்காக களப்பணியாளர்கள் வனத்துக்குள் சென்று கொண்டிருந்தனர். மேல் ஆழியாறு அணையை அடைந்த போது அங்கு போலீஸ் ஜீப் நின்றிருந்தது.சில போலீசார் மப்டியிலும், சில போலீசார் சீருடையிலும் இருந்தனர். மேல் ஆழியாறு அணை வழியாகவே மாவடப்புக்குச் செல்ல முடியும்; 300 மீட்டர் நீளமுள்ள அணைச்சுவர் பாதையின் மறுபகுதியை கடந்தபோது தார்ச்சாலை முடிவுற்று கரடு முரடான பாதை காட்சியளித்தது.வழியில் வனத்துறை ஜீப்பில் வந்து வழிமறித்த உடுமலை வனச்சரகர்(ரேஞ்சர்) மணிகண்டன், 'தனியார் வாகனத்துக்கு அனுமதி இல்லை. திரும்பிப் போங்கள்' என்றார். 'முதன்மை வனப்பாதுகாவலரிடம் (சி.சி.எப்.,) பேசிவிட்டோம். பொள்ளாச்சி மாவட்ட வன அலுவலரிடமும் (டி.எப்.ஓ.,) அனுமதி வாங்கி விட்டோம். வால்பாறை வனச்சரகரிடமும் பேசித்தான் காடம்பாறை சோதனைச் சாவடி வழியாக உள்ளே வந்தோம்' என, விளக்கப்பட்டது.அதை ஏற்காத மணிகண்டன், 'இது உடுமலை வனப்பகுதி; பொள்ளாச்சி டி.எப்.ஓ.,வின் அனுமதி தொடர்பில்லாதது. உங்களை அனுமதிக்க முடியாது' என்றார். ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியத்தை மீண்டும் தொடர்பு கொண்டபோது, 'தவறான தகவல் ஊடகங்களில் பரவிவிட்டது. வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதில்லை. கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். வனத்துறையின் பெயர் 'டேமேஜ்' ஆகிவிட்டது. நீங்கள், உடுமலை மாவட்ட வன அலுவலரிடம் பேசுங்கள்' என்றார். உடுமலை மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனாவை தொடர்பு கொண்டபோது, 'அங்கு, மாவடப்பில் ஒரு 'ஆபரேஷன்' போய்க்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு அனுமதிக்க முடியாது' என்றார்.வேறுவழியின்றி 'தினமலர்' குழு மாவடப்பு கிராமத்துக்கு செல்ல முடியாமல் பாதி வழியிலேயே திரும்ப நேரிட்டது. வனத்துறை, போலீசாரின் தடுப்புக்காவல் நடவடிக்கையால் மாவடப்பு மலைக்கிராமத்தில் எந்த மாதிரியான 'ஆபரேஷன்' நடந்து கொண்டிருக்கிறது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.- நமது நிருபர் குழு -