| ADDED : மே 03, 2024 11:52 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறியும் பணி நேற்று துவங்கியது.தமிழகத்தில் கடந்த, 2022 - 23ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது முற்றிலும் தன்னார்வ முறையில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில், 100 சதவீதம் எழுத்தறிவை உறுதி செய்திட அனைத்து மாவட்டங்களையும், 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக அறிவிப்பு செய்திடுவது மிகவும் அவசியமாகிறது.இதை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும், மாவட்டம் வாரியாக, 15வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்க தெரியாதவர்களை கண்டறியக்கூடிய விரிவான கணக்கெடுப்பு பணிகளை இந்தாண்டும் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.அதன்படி, இந்தாண்டு கற்போர் மற்றும் தன்னார்வலர்கள் கண்டறியும் பணி, பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட, 99 பள்ளிகளில், 112 குடியிருப்பு பகுதிகளில் நேற்று துவங்கியது. வரும், 25ம் தேதி வரை நடைபெறும் இப்பணியில், அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.