மேட்டுப்பாளையம்:காரமடையில் உள்ள கேரள மாநில எல்லை பகுதியான கோப்பனாரியில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. கேரள மாநில வாகனங்களில் வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு என்ற பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், 'நிபா' வைரஸ் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில, அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து கேரளா மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு 'நிபா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. முகாம்
தமிழகத்தில் 'நிபா' வைரஸ் பரவாமல் இருக்க கேரள எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கேரள மாநில எல்லைப் பகுதியான கோப்பனாரியில் சுகாதாரத் துறையினர் மருத்துவ குழுவினருடன் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி வாகனங்களில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும், அந்தந்த வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வருகின்றனர். சுவாச கோளாறு
இது குறித்து மருத்துவக் குழுவினர் கூறியதாவது:-நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழகும் போது, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. தொற்று ஏற்பட்டு 5 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட துவங்குகின்றன. தொற்று தீவிரமடையும் பட்சத்தில் சுவாச கோளாறு மற்றும் மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் முககவசம் அணிய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
ரத்த மாதிரிகள் பரிசோதனை
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது:- மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நிபா வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகள் உள்ளதா என்ன முழுவதுமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில், அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும்.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், நிபா வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். காய்ச்சல், தலைவலி உள்ளவர்கள் அலட்சியமாக மருந்து கடைகளில் தானாக மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.