கோவை;கோவையில் நேற்று இரவு வரையிலும் வாக்காளர்களுக்கு தாராளமயமாக பணப்பட்டுவாடா நடந்தது; ஒரு கட்சியின் மீது மறு கட்சியினர் மாறிமாறி புகார் கொடுத்தார்களே தவிர, யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.கோவை தொகுதியில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் முக்கியமாக மூன்று கட்சிகளுமே வெற்றிபெற வேண்டுமென்று, பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. வி.ஐ.பி.,க்கள் பிரசாரம், களப்பணியைத் தாண்டி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவும் கடந்த மூன்று நாட்களாக ஜோராக நடந்தது.இதில் தி.மு.க., மீதுதான் அதிகளவிலான புகார்கள் குவிந்தன. தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு 500 ரூபாயும், அ.தி.மு.க., சார்பில் 250 ரூபாயும் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதேபோல், பா.ஜ., மீது தி.மு.க., தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் ஆதார ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை.கோவை மாநகராட்சி 63வது வார்டுக்குட்பட்ட ஒலம்பஸ் பழனி ஆண்டவர் வீதியில், தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக பா.ஜ., கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதற்கு ஆதாரமாக, சில போட்டோக்களை அனுப்பியுள்ளனர். அதில், ஒரு வீட்டுக்கு வெளியே திண்ணையில் வைத்து, ஒரு ஆணும் பெண்ணும், வாக்காளர் பட்டியலைச் சரி பார்த்து பணம் கொடுக்கின்றனர்.வாக்காளர் ஒருவரிடம் வாக்காளர் அடையாள அட்டையை வாங்கிச் சரிபார்த்து பணம் கொடுக்கும்போது, வேறு சில வாக்காளர்கள் அருகில் காத்திருக்கின்றனர். இதில் கொடுமை யாதெனில், இப்படி ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவதை, இன்னும் வாக்களிக்கும் வயதே வராத ஒரு சிறுவனும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.பகிரங்கமாக இப்படி திண்ணையில் உட்கார்ந்து பணம் கொடுக்கும் அவர்கள் தி.மு.க.,வினர் தான் என்று பா.ஜ., கட்சியினர் புகார் தெரிவித்தனர். அந்த புகைப்படங்களை, அந்த வார்டு தி.மு.க., கவுன்சிலர் சாந்தி முருகனிடம் அனுப்பி, தி.மு.க., சார்பில் பணம் கொடுக்கப்பட்டதா, பணம் கொடுக்கும் அவர்கள் கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்று கேட்டோம்.அதற்கு அவர், ''அதற்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் தி.மு.க.,வினரே இல்லை,'' என்று திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் பணம் கொடுத்தவர்கள் தி.மு.க.,வினர் தான் என்பதற்கான ஆதாரங்களுடன், தேர்தல் கமிஷனில் புகார் கொடுக்கப் போவதாக பா.ஜ., கட்சியினர் தெரிவித்தனர். வெங்கிட்டாபுரத்திலும் இப்படி தி.மு.க., சார்பில் பணம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இப்படி நேற்று நள்ளிரவு வரையிலும், மாறி மாறி இரு தரப்பினரும் சமூக ஊடகங்களில், அடுத்த கட்சியினர் பணம் கொடுப்பதாக புகார்களைக் குவித்துக் கொண்டேயிருந்தனர். ஆனால் எங்குமே போலீசாரோ, தேர்தல் கமிஷன் அதிகாரிகளோ யாரையும் பிடித்ததாகத் தகவல் வரவில்லை.
பிஞ்சு மனதில் விதைக்கப்படும் நஞ்சு!
வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வேண்டுமென்று, நேர்மையை விரும்பும் அனைவரும் நாடு முழுவதும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் குறிப்பாக கோவையில் அத்துமீறி, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுக்கிறதே தவிர, யாரையும் கைது செய்து தீவிரமாக நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தத் துணிச்சலில் தான், சிறுவனை அருகில் வைத்துக் கொண்டு ஒருவர் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார். அடுத்த தலைமுறையிடத்திலும் விஷத்தை விதைக்கும் இந்த நபர்களைக் கண்டறிந்து, கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.