| ADDED : ஆக 06, 2024 11:08 PM
கோவை : சூலுார் கிட்டாம்பாளையம் நடுநிலைப்பள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்என்று, அக்கிராம மக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.சூலுார் கிட்டாம்பாளையத்தில், அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது.360 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிப்பதற்கு, கிட்டாம் பாளையத்திலிருந்து, 16 கி.மீ., தொலைவுள்ள கருமத்தம்பட்டி அல்லது வாகராயம்பாளையம், அன்னுார் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, செல்ல வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.நாளொன்றுக்கு 16 கி.மீ., தொலைவுக்கு, அரசு பஸ்ஸிற்காக காத்திருந்து பயணம் செய்து விட்டு வரும் மாணவ மாணவியரால், சரிவர வீட்டுப்பாடங்கள் எழுத முடிவதில்லை. சரிவர படிக்க முடிவதில்லை.அதிகாலையில் பள்ளிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மாணவ, மாணவியரின் அன்றாட பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், கிட்டாம்பாளையத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரியும், பெற்றோர் பலர் கலெக்டர் கிராந்திகுமாரிடம் மனு கொடுத்தனர்.