| ADDED : மே 30, 2024 11:50 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் பிரிவில் நரிக்குறவர் காலனியில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பு இன்றி இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு அருகே, பொள்ளாச்சி - கோவை ரோட்டில் தாமரைக்குளம் அருகே சென்றாம்பாளையம் பிரிவு பகுதியில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியினர் நலன் கருதி, அரசு சார்பில் கழிப்பிடம் மற்றும் குளியல் அறை கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.இந்த கட்டடங்களை அப்பகுதியினர் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாளடைவில் பராமரிப்பு இன்றி, ஒவ்வொறு பிரச்னையாக ஏற்பட்டதால், இந்த இரண்டு கட்டடங்களும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த கட்டடத்தின் சுற்றுப்புறத்தில் செடி, கொடிகள் படர்ந்து இருப்பதால் மக்கள் இதை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர்.மக்கள் கூறியதாவது:இங்கு வசிக்கும் மக்கள், இந்த கழிப்பிடம் மற்றும் குளிக்கும் இடத்தை பயன்படுத்தி வந்தனர். சிலர் இங்கு துணி துவைத்து எடுத்து செல்வார்கள். காலப்போக்கில், குழாய் சேதம், கதவுகள் சேதம் மற்றும் செடிகள் படர்ந்து கழிப்பிடத்தை சூழ்ந்தது. இதனால், முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதன் அடிப்படையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சென்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த கழிப்பிடம் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். விரைவில், புதுப்பித்து கொடுக்க வேண்டு வேண்டும்.இவ்வாறு, கூறினர்.