பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, கல்குவாரியில் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீசார் வெடித்த வெடியால், வீடுகள் சேதமடைந்ததாக மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.ஆனைமலையில், கடந்த மே மாதம் கணபதிபாளையத்தில் எலக்ட்ரிக் டெடனேட்டர் - 179, அம்மோனியம் நைட்ரேட் - 3, நான் எலக்ட்ரிக் டெடனேட்டர் - 268, ஜெலட்டின் குச்சிகள் - 908 ஆகிய வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த வெடி பொருட்களை, பொள்ளாச்சி ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, கோவை மாநகர வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு எஸ்.ஐ., சத்யன், தலைமை காவலர் இலங்கேஸ்வரன் ஆகியோர், பக்கோதிபாளையம் அருகே உள்ளதனியார் கல்குவாரியில் அனுமதி பெற்று வெடிபொருட்களை செயலிழப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.வெடி பொருட்களை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டி, மாதிரி சோதனை வாயிலாக வெடிக்கச் செய்தனர். அதன்பின், மீதம் உள்ள வெடி பொருட்களை நெருப்பு வைத்து அழிக்கும் போது, எதிர்பாராதவிதமாக அதிக சப்தத்துடன் வெடித்தது. இதில், கல்குவாரி அலுவலகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடி, அருகே இருந்த தீப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் சுவர், சில வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டது.மேலும், பள்ளி மற்றும் வீடுகளில் சேதாரம் ஏற்பட்டதாக கூறி, பாலமநல்லுார் கிராம மக்கள், கல்குவாரியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சு நடத்தினர்.அப்போது, போலீசார், 'வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு வாயிலாக கோர்ட் உத்தரவுப்படி வெடிபொருட்கள் வெடிக்கப்பட்டன,' என்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென வெடித்ததால், அதிக சப்தம் எழுந்தது. பாலமநல்லுாரில் கட்டிலில் படுத்து இருந்த மாற்றுத்திறனாளி முதியவர் அதிர்ச்சியில் திடீரென கீழே விழுந்தார். அதிக சப்தம் கேட்டதால், கர்ப்பிணிகள் அச்சமடைந்தனர். நான்கு அல்லது ஐந்து வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.வீண் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். இதனால் எங்களுக்கு தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.பேச்சு நடத்திய போது, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, ''கோர்ட் உத்தரவுப்படி அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு தான் வெடி பொருட்கள் வெடித்து செயலிழக்க வைக்கப்பட்டன. எதிர்பாராதவிதமாக சம்பவம் நடந்தது. வேண்டுமென்ற செய்யவில்லை. எவ்வளவு சேதம் என தெரிவித்தால் நஷ்ட ஈடு பெற்றுத்தருகிறேன். வீண் பிரச்னை செய்ய வேண்டாம்,'' என்றார்.இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.