பஸ் ஸ்டாண்டுகளில் வாகனங்கள்; அபராதம் விதிக்க போலீசார் முடிவு
வால்பாறை; பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, சின்கோனா, ேஷக்கல்முடி, முடீஸ், சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து அக்காமலை, வெள்ளமலை வழியாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், இந்த இரண்டு பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் சுற்றுலா வாகனங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால், எஸ்டேட் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், டூரிஸ்ட் வேன்கள் விதிமுறையை மீறி, பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.போலீசார் கூறுகையில்,'வால்பாறை நகரில் உள்ள பஸ் ஸ்டாண்டு பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது. தடையை மீறி வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.